#BREAKING: விருதுநகரில் பட்டாசு ஆலை வெடித்து விபத்து - 6 பேர் பலி!
பட்டாசுத் தொழிலின் தலைநகரான விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வெடி விபத்தால் ஏற்பட்ட சத்தமும், புகையும் அந்தப் பகுதி மக்களையே உறைய வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கட்டுனார்பட்டி கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு இயங்கி வரும் 'வனஜா' என்ற பெயருடைய பட்டாசு ஆலையில்தான் இன்று மாலை 4 மணியளவில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வழக்கம் போலத் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்றால், அந்த ஆலை தரைமட்டமானதோடு, அங்கிருந்து வெளியேறிய கரும்புகை வானுயர எழும்பிச் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் அமைந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும், விபத்து நடந்த நேரத்தில் பணியில் இருந்த ஒரு சிலர் ஆலைக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆலை விதிமுறைப்படி இயங்கியதா? விபத்திற்குப் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமா? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
