#BREAKING: வேடநந்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
தூத்துக்குடி மாவட்டம் வேடநந்த்தம் அருகே 12ம் வகுப்பு இயற்கை உபாதை கழிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் ஏற்கெனவே பாலியல் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் 11ஆம் தேதி காப்புக்காட்டுப் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் தற்போதைய நிலை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலை தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படையினர், மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய 5 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கு அறிவியல் பூர்வமான விசாரணையை நோக்கி நகர்ந்துள்ளது. சந்தேகப்படும் 5 நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த டிஎன்ஏ முடிவுகள் வந்த பிறகே, குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட நபர் யார் என்பது உறுதி செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் பயன்பாட்டில் இருந்த செல்போன் டவர் சிக்னல்கள் மற்றும் செல்போன் அழைப்பு விபரங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், மாணவி காணாமல் போன புகாரை உடனடியாகப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்த காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். ஏற்கெனவே புகாரைப் பெற மறுத்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக இன்று மார்ச் 19ம் தேதி மதியம் முதன்மைக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்பவரைத் தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையிலேயே, தற்போது இந்த மாணவியைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
வேடநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு காற்றின் ஆலை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டது. அந்த வாகன எண்ணை வைத்துத் தேடியபோது, அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் தர்ம முனீஸ்வரன் சிக்கினார்.
