#BREAKING: அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தின் வீரியம் மேலும் அதிகரித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த நச்சு வாயு விபத்தில் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், இருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் 5 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநிலப் பெண் தொழிலாளர் ஒருவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தச் சோகம் மறைவதற்குள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நச்சுப் புகையின் தாக்கத்தால் கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் தொழிலாளரும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொழிற்சாலையில் உரியப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகப் பெரியபாளையம் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்: விபத்திற்குக் காரணமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப் ஜெகன் மற்றும் பொது மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று இரவே அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நச்சுப் புகையிலிருந்து போர்க்கால அடிப்படையில் பத்திரமாக மீட்கப்பட்ட 141 வடமாநிலத் தொழிலாளர்களும் தற்பொழுது அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய்யின் அவசர உத்தரவின்படி அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் தொடர்ந்து இரண்டு அரசு மருத்துவமனைகளின் நிர்வாகங்களுடனும் தொடர்பில் இருந்து, எஞ்சிய தொழிலாளர்களுக்கு உயர்தரச் சிகிச்சைகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர்.
