#BREAKING: அமோனியா கசிவால் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய் - உடல்களைச் சொந்த ஊர்களுக்கு அரசுச் செலவில் அனுப்பி வைக்க உத்தரவு!

 
அமோனியம் வாயு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தலா ரூ.2 லட்சம் அவசர நிதியுதவி அறிவித்துள்ளார்.

கன்னிகைப்பேர் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவு விபத்தில் சிக்கித் துரதிஷ்டவசமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

வாயு அமைச்சர் குமார்

இவ்விபத்தில் உயிரிழந்த வடமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் உடல்களை, எவ்விதத் தொய்வுமின்றிப் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவக் குழுவினருக்கும் முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

அமோனியா வாயு கசிவு மருத்துவமனை

இச்சம்பவம் குறித்துத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.