#BREAKING: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

 
எ.வ.வேலு

திமுகவின் முக்கியப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள முதற்கட்ட விபரங்களின்படி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த ஊரான திருவண்ணாமலையில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது குடியிருப்பு ஆகிய முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இவை மட்டுமன்றி, எ.வ.வேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் மொத்தம் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனிப்படைகளாகப் பிரிந்து ஒரே நேரத்தில் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

எ.வ.வேலு கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மிக முக்கியத் துறையான பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் நடைபெற்ற சில திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களின் பின்னணியிலேயே இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரா அல்லது பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் அதிகாரப்பூர்வ விபரங்களை வெளியிடவில்லை.

இருப்பினும், சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விபரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.