#BREAKING: வாணியம்பாடியில் ரணகளம்.. திமுக - தவெகவினர் இடையே பயங்கர மோதல் - போலீசார் தடியடி.. நிர்வாகி அதிரடி கைது!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நூருல்லாபேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்குப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் நூருல்லாபேட்டை வாக்குச்சாவடிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஒரே குழுவாக வாக்களிக்க வந்துள்ளனர்.

மொத்தமாகத் திரண்டு வந்த தவெகவினரை அங்கிருந்த திமுக முகவர்கள் தடுத்து நிறுத்தினர். "குழுவாக வந்து வாக்காளர்களை அச்சுறுத்தக் கூடாது" எனக் கூறி அவர்கள் கேள்வி எழுப்பியதால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. வாக்குவாதம் முற்றவே, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். இது வாக்குச்சாவடிக்கு வெளியே பெரும் கலவரமாக உருவெடுத்தது.
மோதல் முற்றியதைக் கண்ட அங்குப் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், நிலைமையைக் கட்டுப்படுத்தத் தடியடி நடத்தினர். தடியடியில் சிதறி ஓடிய கூட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மோதலுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி அஸ்லாம் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்க, அந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே தவெக தொண்டர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த விவகாரத்தில் கைதான நிலையில், தற்போது வாணியம்பாடியில் நிகழ்ந்த இந்த மோதல் தவெக மற்றும் திமுகவினரிடையே நிலவும் நேரடிப் போட்டியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
