#BREAKING: நாங்குநேரியைத் தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு - கருப்புக் கொடிகளுடன் கிராம மக்கள் போராட்டம்!
தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி விவகாரத்தில், மூன்று ஆண்டுகளாகியும் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, வேங்கைவயல் கிராம மக்கள் இன்று சட்டமன்றத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கியும் ஒருவர் கூட வாக்குச்சாவடிக்கு வராத நிலையில், கிராம மக்கள் முன்வைத்துள்ள புகார்கள் பின்வருமாறு: 2022-ஆம் ஆண்டு குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

"தேர்தல் நேரத்தில் கூட திமுக கூட்டணி முதல் புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக வரை எந்தவொரு அரசியல் கட்சியும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. யாரும் எங்களிடம் வந்து ஓட்டு கேட்கவில்லை, பிரசாரமும் செய்யவில்லை" என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் நுழைவாயிலில் கருப்புக் கொடிகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்பதே அவர்களின் மாறாத கோரிக்கையாக உள்ளது.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலையும் இக்கிராம மக்கள் புறக்கணித்திருந்தனர். தற்போது சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்திருப்பது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகள் அங்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்கள் தங்களது முடிவில் உறுதியாக உள்ளனர்.
நாங்குநேரி பெரும்பத்து மற்றும் புதுக்கோட்டை வேங்கைவயல் எனத் தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் மக்கள் நீதிக்காகத் தேர்தலைப் புறக்கணித்திருப்பது இந்தத் தேர்தலில் ஒரு முக்கியப் பேசுபொருளாகியுள்ளது.
