#BREAKING: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. வாட்ஸ்-அப்பிலும் ரிசல்ட் பார்க்கும் வசதி!
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மட்டுமின்றி, வாட்ஸ்-அப் செயலி மூலமாகவும் மிக எளிதாக அறிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முறைப்படி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களும் தனித்தேர்வர்களும் தங்களின் மதிப்பெண் விபரங்களை ஆர்வத்துடன் சரிபார்த்து வருகின்றனர்.

எந்தெந்த வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்?
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வித சிரமமும் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளப் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வுப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் முடிவுகளைப் பார்க்கலாம்.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ results.digilocker.gov.in என்ற டிஜிலாக்கர் தளம் மற்றும் செயலி வழியாகவும் மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விபரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு மாணவர்கள் தங்களின் வாட்ஸ்-அப் செயலி மூலமாகவும் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிந்து கொள்ளும் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக எண்கள் மற்றும் லிங்க்குகள் மூலம் மாணவர்கள் தங்களின் ரிசல்ட்டை நொடிப் பொழுதில் மொபைலிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் தங்களின் தேர்வு முடிவுகளைப் பள்ளித் தகவல் பலகை மூலம் அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் தேதி மற்றும் ஏதேனும் பாடங்களில் தகுதி பெறாத மாணவர்களுக்கான உடனடித் துணைத் தேர்வுகள் குறித்த விபரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
வழக்கம்போல மாணவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
