#BREAKING: கன்டெய்னர் லாரி - மினிபஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 16 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்!

 
அசாம் மினி பஸ் விபத்து

அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே உள்ள ரோங்காஜன் பகுதியில், கன்டெய்னர் லாரியும் பயணிகள் மினிபஸ்ஸும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் போகாகாட் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகாவோன் நோக்கி மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. காசிரங்கா அருகே உள்ள ரோங்காஜன் பகுதியில் மினிபஸ் சென்று கொண்டிருந்த போது, எதிர்த் திசையில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மினிபஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இரு வாகனங்களும் அதிவேகத்தில் மோதியதில், மினிபஸ்ஸின் முன்பகுதி முற்றிலுமாக உருகுலைந்து பலத்த சேதமடைந்தது. விபத்தின் தாக்கத்தால் மினிபஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் பலர் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர். விபத்து நடந்த இடத்திலிருந்து எழுந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்த நிலையில், மொத்தம் 16 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து

விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள கோஹோரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்ததுடன், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.