#BREAKING: எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய திரைப்படப் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பின்னி மில் வளாகத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை, அப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி, காட்சியில் இடம்பெறும் 'வெடிகுண்டு வெடிப்பது' போன்ற தத்ரூபமான சூழலை உருவாக்குவதற்காக, பிரத்யேக சிலிண்டர் ஒன்றில் வாயு நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த சிலிண்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில், சிலிண்டருக்கு மிக அருகில் பணியில் ஈடுபட்டிருந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பூர் போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நடந்த இடத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா? சிலிண்டரில் வாயு நிரப்பியதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா? அல்லது அலட்சியத்தால் இந்த விபத்து நேரிட்டதா? என்ற கோணத்தில் படப்பிடிப்பு குழுவினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பின்னி மில் வளாகத்தில் தற்காலிகமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
