#BREAKING: திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு - தீவிர சிகிச்சைக்கு அனுமதி!

 
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நின்றிருந்த பக்தர் ஒருவர் திடீரெனத் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஆடி வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு வழக்கத்தை விட திருச்செந்தூர் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டமாகச் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சண்முகவிலாச மண்டபத்தின் முன்பாக நின்றிருந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் உடலில் ஊற்றி திடீரெனத் தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்களும், அங்கிருந்த பாதுகாப்புப் போலீசாரும் உடனடியாக ஓடிவந்து தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்தனர். தீக்காயமடைந்த நபரை மீட்டு உடனடியாகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் கோவில் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளித்தவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (38) என்பது தெரியவந்தது.

திருமணமான சுரேஷிற்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டுத் திருச்செந்தூர் கோவில் வளாகப் பகுதியிலேயே சுற்றித் திரிந்து வந்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.