#BREAKING: வெனிசுலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்.. ரிக்டர் 7.2 மற்றும் 7.5 ஆக உக்கிரம்.. சரிந்து விழும் கட்டிடங்கள். சுனாமி எச்சரிக்கை!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று மாலை அடுத்தடுத்து 39 வினாடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் இரண்டு மிகச் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இக்கோர விபத்தால் தலைநகர் கராகஸ் (Caracas) உட்படப் பல நகரங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி நேற்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 6:00 மணியளவில், கடலோர நகரமான மொரோனுக்கு மேற்கே 21.9 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு ஏற்பட்டுச் சரியாக 39 வினாடிகளுக்குள், அதற்குச் சற்று வடக்கே பூமியின் அடிபரப்பில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மிகக் குறைந்த ஆழத்தில் இருந்ததால் அதன் உக்கிரம் மிகக் கடுமையாக இருந்தது. வெனிசுலா மக்கள் தங்களது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொது விடுமுறை தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இந்த இயற்கைச் சீற்றம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கத்தால் தலைநகர் கராகஸில் உள்ள மாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வங்கிக் கட்டிடங்கள் பயங்கரமாக உலுக்கப்பட்டன. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் பக்கவாட்டுச் சுவர்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
கராகஸின் அல்தமிரா மற்றும் லாஸ் பாலோஸ் கிராண்டஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குப் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மேலும், கராகஸின் பிரதான சர்வதேச விமான நிலையமான சிமோன் பொலிவர் விமான நிலையமும் பலத்த சேதமடைந்ததை அடுத்து, அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

கட்டிட இடிபாடுகளால் ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கப் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ராணுவ உதவியுடன் தீவிரமாக நடந்து வருகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கரீபியன் கடலோரப் பகுதிகள், போர்ட்டோ ரிகோ, டொமினிகன் குடியரசு மற்றும் கன்னித் தீவுகளுக்கு முதற்கட்டமாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், கடல் அலைகளில் பெரிய ஆபத்தான மாற்றங்கள் இல்லாததால், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.
உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ இறுதிப் புள்ளிவிபரங்களை வெனிசுலா அரசு இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. எனினும், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
