#BREAKING: தீவிரமடையும் போர் பதற்றம்... 8 வளைகுடா பாலங்களைச் சுட்டிக்காட்டிய டெஹ்ரான் - அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஆயத்தம்!

 
ஈரான் பாலம் ஈரான் பாலம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 5-வது வாரமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

ஈரானின் கரஜ் நகரில் கட்டுமானத்தில் இருந்த, மத்திய கிழக்கிலேயே மிக உயரமான (136 மீட்டர்) 'B1' பாலத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று (வியாழக்கிழமை) குண்டு வீசித் தாக்கின. இந்தத் தாக்குதலில் பாலம் நிலைகுலைந்து சரிந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 95 பேர் காயமடைந்தனர்.


"ஈரானின் மிகப்பெரிய பாலம் தரைமட்டமாகிவிட்டது. ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அந்த நாடு கற்காலத்திற்குத் தள்ளப்படும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் பதிவிட்டு எச்சரித்துள்ளார். தனது நாட்டின் மிக முக்கியமான பாலம் தகர்க்கப்பட்டதற்குப் பதிலடியாக, அண்டை நாடுகளில் உள்ள 8 பாலங்களை ஈரான் தனது இலக்காக அறிவித்துள்ளது. ஈரானின் 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலங்கள்:

குவைத்: ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா கடல் பாலம். ஐக்கிய அரபு அமீரகம்: ஷேக் சையத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம். சவுதி அரேபியா - பஹ்ரைன்: இரு நாடுகளையும் இணைக்கும் கிங் ஃபஹத் காஸ்வே. ஜோர்டான்: கிங் உசேன் பாலம், தாமியா பாலம் மற்றும் அப்துன் பாலம்.

ஈரான்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தொடங்கிய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக ஈரான் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாலங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்கான கட்டமைப்புகளைத் தாக்குவது போரின் விதிகளை மீறுவதாகும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் பாதுகாக்கும் நாடுகளுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.