#BREAKING: பட்டாசு ஆலையில் வெடி விபத்து... 10 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

 
பட்டாசு ஆலை வெடிவிபத்து பட்டாசு ஆலை வெடிவிபத்து

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம், டோங்க் கலான் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 11:30 மணியளவில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

வெடிவிபத்தின் சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வெடிப்பின் வேகத்தில் தொழிற்சாலையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதுடன், அருகிலுள்ள வீடுகளின் சுவர்களும் அதிர்ந்தன. நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலப்படி, உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் தொழிற்சாலையிலிருந்து சுமார் 20 முதல் 25 அடி தூரம் வரை சிதறிக் கிடந்தன. இந்த கோரக் காட்சி மீட்புக் குழுவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பட்டாசு ஆலை வெடி

முதற்கட்டத் தகவலின்படி 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 2 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்த வெடிமருந்து மற்றும் இரசாயனக் கலவைகளே இந்தத் திடீர் வெடிப்பிற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

பட்டாசு வெடிவிபத்து

இந்தத் தொழிற்சாலை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரிதுராஜ் சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தி எஞ்சியிருக்கும் வெடிமருந்துகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.