#BREAKING: திமுகவில் முதல் விக்கெட்... அதிருப்தியால் தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்!
திமுக 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்ட நிலையில், அதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி தனது கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ கருணாநிதி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அவர் உருக்கமாக, "கடந்த பல ஆண்டுகளாகக் கட்சியின் பகுதிச் செயலாளராகவும், தொண்டனாகவும் நான் சிந்திய உழைப்பிற்குத் தற்போது எவ்வித மதிப்பும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மன வருத்தத்துடன் எனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்கிறேன்."
சென்னையில் தற்போதைய 6 எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தி.நகர் தொகுதியில் ஜெ. கருணாநிதிக்கு பதிலாகப் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் உள்கட்சி ஆய்வுகளின் அடிப்படையில் 'புதுமுகங்களுக்கு வாய்ப்பு' என்ற கட்சியின் கொள்கை முடிவே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஜெ. கருணாநிதி கடந்த 2021 தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியான உடனே அவர் அதிரடியாக ராஜினாமா செய்திருப்பது, சென்னை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்ற 5 எம்.எல்.ஏ-க்களும் என்ன முடிவெடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
