BREAKING: கோயில்களில் செல்போன்களை எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்துப் புகழ்பெற்ற கோயில்களிலும் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கு இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடை தற்போது நீக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் செல்போன்களை ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்துவிட்டு கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம் என்று புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், சாமி தரிசனம் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் தமிழகத்தின் பல்வேறு முக்கியக் கோயில்களிலும் செல்போன்கள் எடுத்துச் செல்லத் கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோயில்களுக்கு வெளியே செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்வதில் பக்தர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளையும் சிரமங்களையும் கருத்தில்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை இந்தத் தடையை விலக்கி கொண்டுள்ளது. இருப்பினும், கோயில்களின் புனிதமும் அமைதியும் எந்த வகையிலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் துறையினர் உறுதியாக உள்ளனர்.
செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பக்தர்கள் அனைவரும் கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது: கோயிலுக்குள் நுழையும் போதே பக்தர்கள் தங்களது செல்போன்களை முழுமையாக ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்ய வேண்டும்.
கோயி்ல் வளாகத்திற்குள் அல்லது சன்னதிகளுக்கு அருகில் நின்று கொண்டு வீடியோ எடுப்பதோ அல்லது புகைப்படம் எடுப்பதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறி யாரேனும் கோயிலின் புனிதத்தைப் பாதிக்கும் வகையில் செல்போன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காகச் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், கோயிலின் பாரம்பரியமும் ஆன்மீகச் சூழலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
