BREAKING: கொலம்பியாவில் கோர விபத்து... 121 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அமேசான் வனப்பகுதியை ஒட்டியுள்ள புவேர்ட்டோ லெகுய்சாமோ என்ற இடத்தில், ராணுவ வீரர்கள் பயணித்த ஹெர்குலஸ் C-130 ரக விமானம் விபத்துக்குள்ளானது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம், புவேர்ட்டோ லெகுய்சாமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திலிருந்து சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்தவுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால், அந்தப் பகுதியே கரும்புகையால் சூழ்ந்தது.
விமானத்தில் மொத்தம் 121 பேர் இருந்ததாகக் கொலம்பியா விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 110 ராணுவ வீரர்கள், 11 விமானப் படை ஊழியர்கள் பயணித்துள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததாலும், 40-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுவரை தெரியவில்லை என்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் போகோடாவில் உள்ள ராணுவ மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ தனது எக்ஸ் தளத்தில், "இந்தக் கொடூரமான விபத்து நடந்திருக்கவே கூடாது" எனத் தெரிவித்துள்ளார். ராணுவ விமானங்களை நவீனப்படுத்தாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமானத்தில் இருந்த வெடிமருந்துகள் தீப்பற்றியதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது வரை இது ஒரு தொழில்நுட்பக் கோளாறால் நடந்த விபத்தாகவே பார்க்கப்படுகிறது. எனினும், தீவிரவாதத் தாக்குதல்கள் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
