"சாதிப் பேரைச் சொல்லி வயிறு வளர்ப்பவனல்ல!" - நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டார் - தொடரும் நாக்குப் பிறழ்வு!
தமிழ் திரையுலகில் 'புதிய பாதை' கண்டவர், தனது வித்தியாசமான சிந்தனைகளாலும், நக்கல் கலந்த பேச்சாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். எப்போதுமே வார்த்தைச் சிலேடைகளால் விளையாடும் பார்த்திபன், சமீபத்தில் ஒரு பொது மேடையில் தனது சாதிப் பெயரைப் பயன்படுத்தியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. .
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'உஸ்தாத் பகத்சிங்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பார்த்திபன், மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டுத் தனது சாதிப் பெயரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

பொதுவாகச் சாதி மறுப்பு, முற்போக்குச் சிந்தனைகளைப் பேசும் பார்த்திபன், ஒரு தெலுங்குப் பட மேடையில் தற்செயலாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ தனது சாதிய அடையாளத்தைக் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
"பார்த்திபனா இப்படிப் பேசினார்?" என்ற அதிர்ச்சி ரசிகர்களிடையே எழுந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பார்த்திபனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் விமர்சனங்கள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் மிக நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சத்தியமாகச் சொல்கிறேன், எந்த லாப நோக்கோ, வாய்ப்புக்காகவோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன்முறை. அங்கே பேசினால் இங்கே தெரியாது என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. ஏதோ வாய்தவறி நடந்து விட்டது. "இவன்' உள்ளிட்ட எனது பல படங்களில் சாதி வெறியை நானே கண்டித்துள்ளேன். அப்படி இருக்கையில் நானே அதைச் செய்வேனா? இனி ஒருமுறை கூட இது போன்ற தவறு நடக்காது என உறுதியளிக்கிறேன். உங்கள் அன்பைப் பாதுகாக்க இனி மிக ஜாக்கிரதையாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். பார்த்திபனின் இந்த வெளிப்படையான மன்னிப்பு, அவர் மீதான கோபத்தைச் சற்று தணித்துள்ளதாகவே தெரிகிறது.

பார்த்திபனின் இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் நடிகை த்ரிஷா குறித்துப் பேசப்பட்ட சர்ச்சைகளையும் நினைவூட்டுகிறது. குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்திருக்கலாம் என்கிற நக்கல் கலந்த பார்த்திபனின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட திரைப்பிரபலங்களும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். த்ரிஷா இது குறித்து பதிவிட்டதும், நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
