#BREAKING: ஈரான் தூதுக்குழு இஸ்லாமாபாத் வருகை... 'அனல்' பறக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை! லெபனானிலும் போர்நிறுத்தம் அறிவிப்பு!

 
இஸ்லாமாபாத் இஸ்லாமாபாத்

மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த 40 நாட்களாகப் பற்றி எரிந்து வந்த போர் மேகங்களுக்கு இடையே, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இதற்காக ஈரானின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று அதிகாலை இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால், இந்த அமைதி முயற்சி வெற்றி பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இன்று அதிகாலை இஸ்லாமாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார், ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத் முழுவதும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு கட்டிடங்கள் உள்ள 'சிவப்பு மண்டலம்' ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

லெபனான்

ஈரானின் அதிரடி நிபந்தனைகள்: "செயல்பாடு இல்லையேல் பேச்சுவார்த்தை இல்லை!"

பேச்சுவார்த்தைக்காக ஈரானிய குழு வந்தடைந்தாலும், அவர்கள் அமெரிக்காவிடம் இருந்து இரண்டு மிக முக்கியமான செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். இஸ்லாமாபாத் புறப்படுவதற்கு முன்பே தனது 'X' தளத்தில் பதிவிட்ட சபாநாயகர் காலிபாஃப், தெஹ்ரானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்:

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்த போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்பட வேண்டும். லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்காவால் சட்டவிரோதமாக முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி மற்றும் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

"இந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை மேசையில் ஈரான் அமரும். அமெரிக்கா தனது உறுதிமொழிகளைச் செயலில் காட்ட வேண்டும்" என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பியுள்ள உயர்மட்டக் குழுவிற்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். அவர் பாகிஸ்தான் நோக்கிப் புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்:

"அதிபர் டிரம்ப் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் (Good faith) பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாங்கள் உதவிக்கரம் நீட்டத் தயார். ஆனால், எங்களை ஏமாற்றவோ அல்லது காலம் கடத்தவோ முயன்றால், அமெரிக்கப் பேச்சுவார்த்தைக் குழு அதற்கு ஒருபோதும் இணங்காது. ஈரான் எங்களோடு விளையாட வேண்டாம்" என வேன்ஸ் கர்ஜித்துள்ளார்.

லெபனான்

பாகிஸ்தானின் ராஜதந்திர வெற்றி?

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை முடக்கம் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொட வைத்தது. இந்தச் சூழலில், இரு தரப்பையும் ஒரு மேசைக்குக் கொண்டு வந்திருப்பது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாதது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. "அமெரிக்கா தனது போர் நிறுத்த உறுதிமொழிகளை மதிக்க வேண்டும்; இல்லையேல் பேச்சுவார்த்தைச் சீர்குலைவதற்கு அவர்களே பொறுப்பு" என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்பார்ப்பு:

இன்று பிற்பகல் தொடங்கவிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை, வெறும் இரண்டு நாடுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல; இது உலக எரிசக்தி சந்தை மற்றும் சர்வதேசப் பாதுகாப்புடன் தொடர்புடையது. ஒருவேளை பேச்சுவார்த்தை வெற்றி பெற்று நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட்டால், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போர் மீண்டும் தொடங்கினால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

இஸ்லாமாபாத்தில் நிலவும் இந்த 'திக் திக்' நிமிடங்களில், அமெரிக்கத் தூதுக்குழு இன்னும் இஸ்லாமாபாத்தில் தரையிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா? அல்லது மத்திய கிழக்கில் மீண்டும் பீரங்கிகள் முழங்குமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.