#BREAKING: "திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?" - விஜய் ஆவேசம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பூர் பரப்புரைக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல் என்று திமுக அரசை விமர்சித்துள்ளார்.
விஜய் தனது அறிக்கையில் பெரம்பூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களைப் பட்டியலிட்டுள்ளார். மார்ச் 26ம் தேதியே பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பில் பரப்புரை மேற்கொள்ள முறைப்படி அனுமதி கோரப்பட்டது. பரப்புரைக்கு ஒரு நாள் முன்னதாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அந்த இடத்தில் பள்ளங்களைத் தோண்டி, இரும்பாலான தடுப்புகளை வைத்துள்ளனர். "இந்தத் திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 27, 2026
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக்… pic.twitter.com/cGFXeCuYW0
மாநகராட்சி ஏற்படுத்திய அந்தத் தடைகளைச் சுட்டிக்காட்டியே, "அங்கே 3,000 பேர் கூட முடியாது" எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இடம் உகந்ததல்ல எனத் தவெக-வின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் துணையுடன் தவெக-விற்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?" என விஜய் நேரடியாகச் சாடியுள்ளார்.
தவெக தேர்தல் பரப்புரை செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் ஏதேதோ காரணங்களைக் கூறி அனுமதி மறுப்பது தொடர்கதையாகி வருகிறது. இது ஒரு புதிய கட்சியின் ஜனநாயக உரிமையைத் திட்டமிட்டு நசுக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "தவெக-வைக் கண்டு திமுக எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. தங்களுக்கு எதிராக உருவெடுப்பவர்களை அதிகார பலத்தால் நசுக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை" என விஜய் விளாசியுள்ளார்.

ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடும் திமுக ஆட்சியை, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி என விஜய் தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளார்.
விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல் திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனத் தவெக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அடுத்தகட்டமாகப் பரப்புரை எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
