#BREAKING: 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை - வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போதே விபரீதம்!
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 'கயல்' உள்ளிட்ட முக்கியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவரது திடீர் மரணம் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்களின்படி, சுபாஷினிக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. தற்கொலை செய்துக் கொள்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, சுபாஷினி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உரையாடலின் போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, அவர் நேரலையிலேயே இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபாஷினி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சுபாஷினியின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கணவருடனான மோதலுக்குக் காரணம் என்ன? அல்லது திரைத்துறையில் ஏதேனும் அழுத்தங்கள் இருந்ததா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
