#BREAKING: டோப்பிங் பரிசோதனையில் சிக்கிய லக்ஷ்யா.. இந்தியாவின் முதல் துடுப்புப்படகு உலகக்கோப்பை தங்கம் பறிப்பு!

 
படகுப்போட்டி

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்புப்படகு போட்டியில் இந்தியா வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம், இந்திய வீரர் லக்ஷ்யா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கியதால் அதிகாரப்பூர்வமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இந்தியத் துடுப்புப்படகு வரலாற்றுக்கே இது ஒரு பெரும் பின்னடைவாகவும், விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் 'லைட்வெயிட் ஆண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ்' பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷ்யா மற்றும் உஜ்வல் குமார் சிங் கூட்டணி இணைந்து பங்கேற்றது. இப்போட்டியில் 6 நிமிடங்கள் 26.09 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த இந்த இணை, உலகக்கோப்பைத் துடுப்புப்படகு வரலாற்றிலேயே இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிப் புதிய சரித்திரம் படைத்தது. வரலாற்றுச் சாதனை படைத்த சில நாட்களிலேயே இச்சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய பரிசோதனையில், இந்திய வீரர் லக்ஷ்யா உடல்திறனை உயர்த்தும் 'ஸ்டானோசோலோல்' என்ற தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உள்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்பாகக் கடந்த மே 25-ம் தேதி புனேவில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் சேகரிக்கப்பட்ட லக்ஷ்யாவின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த முடிவு வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து லக்ஷ்யாவுக்கு நாடா அமைப்பு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடா விதிகளின்படி, ஊக்கமருந்துச் சோதனை மாதிரி எடுக்கப்பட்ட மே 25-ம் தேதிக்குப் பிறகு லக்ஷ்யா பெற்ற அனைத்து வெற்றிகளும் சாதனைகளும் செல்லாததாக அறிவிக்கப்படும். இதன் காரணமாக, லக்ஷ்யா மற்றும் உஜ்வல் குமார் சிங் கூட்டணி வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உலகக்கோப்பை தங்கப் பதக்கத்தை இந்தியா இழந்துள்ளது.

படகுப்போட்டி

தனது தரப்பு விளக்கத்தையோ அல்லது 'பி' மாதிரியையோ சோதித்து அவர் மீதான குற்றச்சாட்டைக் கடக்கத் தவறினால், லக்ஷ்யாவுக்குக் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை போட்டிகளில் பங்கேற்கக் கடுமையான தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடர்கள் நெருங்கி வரும் வேளையில், இந்திய ராணுவ வீரரான ஹவில்தார் லக்ஷ்யா ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பது இந்திய விளையாட்டுத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.