#BREAKING: பதவியேற்ற 24 மணிநேரத்தில் அதிரடி - நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது!

 
நேபாள் முன்னாள் பிரதமர் கைது நேபாள் முன்னாள் பிரதமர் கைது

நேபாளத்தில் நிலவி வந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையே, புதிய பிரதமர் பாலேந்திர ஷா பதவியேற்ற நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் 'ஜென்-சி' (Gen-Z) தலைமுறையினர் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்குக் காரணமானதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  டிக்டாக் தடை மற்றும் அரசியல் தலைவர்களின் சொத்துக்குவிப்புக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நேபாள் பிரதமர் பாலேந்திர ஷா

இந்தப் போராட்டத்தின் போது நாடாளுமன்றக் கட்டிடம் தீவைக்கப்பட்டதும், தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்குகளின் அடிப்படையிலேயே தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய உள்துறை அமைச்சர் சுதன் குருங் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்துக் கூறுகையில், "சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. இது யாருக்கும் எதிரான பழிவாங்கல் நடவடிக்கை கிடையாது; இது நீதியின் தொடக்கம் மட்டுமே. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். இனி நாடு புதிய திசையை நோக்கிச் செல்லும்."

நேபாள் பிரதமர் பாலேந்தர் ஷா

யார் இந்த பாலேந்திர ஷா? (புதிய பிரதமர்):

நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமர். காத்மாண்டுவின் முன்னாள் மேயர், சிவில் இன்ஜினியர் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர். மார்ச் 5-ல் நடந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் ஒலியை எதிர்த்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்டு 49,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 275 இடங்களில் இவரது 'ராஷ்ட்ரீய சுவந்த்ரா' கட்சி 182 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

நேபாள வரலாற்றில் ஒரு பாடகர் மற்றும் இன்ஜினியர் பிரதமராகப் பதவியேற்றதும், பதவியேற்ற உடனே ஊழல் புகாரில் முன்னாள் பிரதமரைக் கைது செய்ததும் அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.