#BREAKING: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சொத்து தகராறு தொடர்பான வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து, தமிழக நிதி அமைச்சர் என். மரிய வில்சனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அமைச்சர் மரிய வில்சனின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களைத் தாக்கியதாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடும்பத்தில் நிலவி வந்த சொத்து மற்றும் தொழில் தகராறு காரணமாக இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்வதற்காக வரும் ஜூலை 10ஆம் தேதி (நாளை) புதுச்சேரி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

தங்கள் மீதான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
இது முற்றிலும் ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்ட சொத்து விவகாரம் என்பதால், சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்திச் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், குடும்ப விவகாரமாக இருப்பதால் இதில் சமரசம் பேசத் தயாராக இருப்பதாகக் கூறியதை ஏற்று, நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவதிலிருந்து தற்காலிக விலக்கு அளித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
