#BREAKING: தேசிய விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!!
தமிழ் திரையுலகில் எதார்த்தமான ஒளிப்பதிவின் மூலமும், சர்வதேசத் தரம் வாய்ந்த வாழ்வியல் படைப்புகள் மூலமும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று காலை காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா உலகினரிடையேயும், ரசிர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் காட்சிக் கோணங்களை எளிய எதார்த்த மொழியில் கடத்திய பெருமை ஒளிப்பதிவாளர் செழியனுக்கு உண்டு. பாலா இயக்கத்தில் உருவான 'பரதேசி', ஆர்.டி. மிஸ்ரா இயக்கத்தில் உருவான 'கல்லூரி', சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' மற்றும் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்குத் தனது அசாத்தியமான கேமரா கண்கள் மூலம் எதார்த்தமான ஒளியமைப்பை வழங்கிப் பாராட்டுகளைப் பெற்றவர்.
ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி, சிறந்த இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் இயக்கிய 'டூலெட்' திரைப்படம் மத்திய அரசின் மிக உயரிய தேசிய விருதைப் பெற்றதுடன், பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுப் பல உலகளாவிய விருதுகளைக் குவித்து, தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தது.
திரைத்துறையினரின் ஆழ்ந்த இரங்கல்களுக்கு மத்தியில், மறைந்த இயக்குநர் செழியனின் உடல் பொதுமக்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறுதி அஞ்சலிக்காகச் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது.
செழியனின் மறைவு குறித்துத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தங்களது தாளாத துயரத்தைப் பகிர்ந்து வருகின்றனர். "தமிழ் சினிமா ஒரு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞனையும், எளிய மனிதர்களின் கதையைக் கூறிய உன்னத இயக்குநரையும் இழந்துவிட்டது" எனத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் செழியனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதை அடுத்து, அங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் பெருமளவில் வரக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் போலீசார் தகுந்த முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
