#BREAKING:: பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
பூரி ஜெகந்நாதர்

ஒடிசா மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் குவிந்தனர். இந்த ஆண்டு ரத யாத்திரையை நேரில் கண்டு தரிசிக்கச் சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாகப் பக்தர்கள் குவிந்ததால், தேரோட்டப் பாதையில் திடீரெனக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர் ஒருவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த எதிர்பாராத நெரிசலில் சிக்கி பெண்கள், முதியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மீட்புக் குழுவினரால் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.