#BREAKING: தங்கச் சுரங்கத்தில் ரத்த ஆறு.. .74க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை - சூடானில் மர்மக் கும்பலின் வெறியாட்டம்!

 
சூடான் தங்கச்சுரங்கம் சூடான் தங்கச்சுரங்கம்

தெற்கு சூடானில் தங்கம் எடுக்கும் உரிமை தொடர்பான தகராறில், ஒரு கிராமமே ரத்தக் காடாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் ஜூபா அருகே நடைபெற்ற இந்தக் கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடானின் மத்திய எக்குவடோரியா மாகாணத்தில் உள்ள ஜெபல் ஈராக் (Jebel Iraq) தங்கச் சுரங்கப் பகுதியில், ஒரு மர்மக் கும்பல் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்று சூடான் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி,  சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் பணியை முடித்துக்கொண்டிருந்த வேளையில், குதிரைகளில் வந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, கோர் கல்டன் என்ற இடத்தில் தொழிலாளர்களைச் சூழ்ந்து கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியுள்ளது.

சூடான் தங்கச்சுரங்கம்

முதற்கட்டமாக 70 பேர் பலியானதாகத் தகவல்கள் வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 74-ஐக் கடந்துவிட்டது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்கப் பலர் அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் ஓடி மறைந்தனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை 85-க்கும் மேல் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஜெபல் ஈராக் பகுதி நீண்ட காலமாகத் தங்கச் சுரங்க உரிமை தொடர்பாக உள்ளூர் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களுக்கும், சில சுரங்க நிறுவனங்களுக்கும் இடையே மோதல் போக்கைக் கொண்டிருந்த இடமாகும். வளங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவே இந்த "ஹெயினஸ் படுகொலை" நடத்தப்பட்டதாகத் தெற்கு சூடான் துணைத் அதிபர் ஜேம்ஸ் வானி இக்கா தெரிவித்துள்ளார்.

சூடான் தங்கச்சுரங்கம்

இந்தத் தாக்குதலுக்கு அரசுப் படைகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது. தற்போது அந்தப் பகுதியில் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 11 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், திறந்த வெளியில் டஜன் கணக்கான உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளன. ஒரு பாதிக்கப்பட்ட நபரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.