BREAKING:தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தல்: இயக்குநர் சேரன் வெற்றி!

 
சேரன் குகநாதன்

சென்னை வடபழனியில் இன்று (ஜூலை 19) விறுவிறுப்பாக நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தேர்தலில், பிரபல இயக்குநர் சேரன் அபார வெற்றி பெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆர்.கே. செல்வமணி அணியினருக்கும் சேரன் அணியினருக்கும் இடையே நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் இந்த அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் 'நம்ம கே.பாக்யராஜ்' அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்து உடனே தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இயக்குநர் சேரன் 12 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 279 வாக்குகள் பெற்றுத் தனது வெற்றியைப் பதிவு செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அணியினரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்று அவர் சங்கத்தின் உயரிய பதவியைக் கைப்பற்றியுள்ளார்.

வாக்குப்பதிவின் போது இரு தரப்பிற்கும் இடையே லேசான சலசலப்புகள் ஏற்பட்ட போதிலும், வாக்கு எண்ணிக்கை எவ்விதத் தடங்கலுமின்றிச் சுமுகமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் சேரன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி இயக்குநர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள இயக்குநர் சேரனுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.