#BREAKING: தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை- உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு!

 
கலர் அப்பளம்

தமிழ்நாட்டில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான வண்ணங்களில் விற்கப்படும் இந்த அப்பளங்கள், ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செயற்கையான மற்றும் அனுமதிக்கப்படாத இரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்த அப்பளங்களை உண்பதால், குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பின்வரும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

கலர் அப்பளம்

தோலில் அரிப்பு, தடிப்பு போன்ற ஒவ்வாமைப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் சேர்க்கப்படும் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பெருமளவில் பாதிக்கக்கூடும். தொடர்ந்து இத்தகைய ரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்வது, பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை மிக அதிகமாக உயர்த்துகிறது.

இத்தகைய உயிருக்கு ஆபத்தான செயற்கை நிறமூட்டிகள் கலந்த அப்பளங்களைத் தவிர்த்துவிட்டு, உளுந்து மற்றும் அரிசி போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கலர் அப்பளம்

மேலும், தடையை மீறி கடைகளில் கலர் அப்பளங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.