#BREAKING: தமிழகமே பரபரப்பு... தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு.. 45 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி; வாய், மூக்கில் ரத்தக் கசிவால் அதிர்ச்சி!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் குளிர்சாதனத் தொழிற்சாலையில் (பிரான் பிராசசிங் யூனிட்) இன்று மதியம் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அந்தத் தொழிற்சாலையில், இறால்களைப் பதப்படுத்தி வைக்கும் அதிநவீன குளிர்சாதனக் கட்டமைப்பிற்காக (கோல்ட் ஸ்டோரேஜ்) அமோனியா எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று மதியம் 12 மணியளவில், எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நச்சுத்தன்மை வாய்ந்த அமோனியா வாயு வெளியேறத் தொடங்கியது.
அந்தப் பகுதியில் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு அடுத்த சில நொடிகளிலேயே கடுமையான கண் எரிச்சலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதில் வீரியத்துடன் வாயுவைச் சுவாசித்த 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். வாயு கசிவின் தீவிரம் காரணமாகத் தொழிற்சாலை வளாகம் முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்தது.
நச்சு வாயுவை நேரடியாகச் சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு தாக்கத்தின் காரணமாக வாய் மற்றும் மூக்குப் துவாரங்கள் வழியாக ரத்தம் கசிந்ததால் அங்கு உச்சகட்டப் பரபரப்பும், மரண பயமும் ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் உயிரைக் காக்க அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர்.
தகவலறிந்தவுடன் பெரியபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப் படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டு உள்ளே நுழைந்து, மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், நவீன ரசாயனக் கலவைகளைப் தெளித்து, அமோனியா வாயு கசிந்த குழாயை அடைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாதிக்கப்பட்ட 45 தொழிலாளர்களும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
