#BREAKING: நள்ளிரவில் பதற்றம்... சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ராகுல், பிரியங்கா உடனிருந்து கவனிப்பு!
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி (79), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரத்தில் இது குறித்த தகவல்கள் வெளியானவுடன் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவியது.
தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் அனூப் பாசு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு நெஞ்சுப் பகுதி சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக (Stable) இருப்பதாகவும், பயப்படும்படி ஏதுமில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். இருவரும் இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருந்து தாயாரின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டனர்.
சோனியா காந்திக்கு ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு இருப்பதால், டெல்லியின் காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றத்தின் போது அவர் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 2026-லும் இதே போன்ற சுவாசப் பிரச்சனையால் அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

