#BREAKING: மகாராஷ்டிராவில் பயங்கரம்.. அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் பலி; 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கும் அபாயம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மாலை ஒரு ஆன்மீகக் கூடாரத்தில் நடந்த கொடூர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள ஒரு புகழ்பெற்ற அனுமன் கோவிலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவில் வளாகத்திற்குள் இருந்த பல டஜன் கணக்கான பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டம் மன்வத் தாலுகாவிற்கு உட்பட்ட யஷ்வாடி என்ற கிராமத்தில் 'திரிமூர்த்தி அனுமன் கோவில்' அமைந்துள்ளது. இக்கோவிலின் ஒரு பகுதியில் புதிய மேற்கூரை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தன.
இன்று சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரை வழிபடக் கோவிலில் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மாலையில் வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாகப் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அந்தப் பிரம்மாண்ட சிமெண்ட் மேற்கூரை பாரம் தாங்காமல் மொத்தமாகப் பக்தர்கள் மீது சரிந்து விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 30 முதல் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிமெண்ட் காரைகள் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த அதே நொடியில், கட்டுமானத்தில் இருந்த மேற்கூரை திடீரென ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் தற்போதுது வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பர்பானி மாவட்ட தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றி, உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாகப் போர்ர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
