#BREAKING: சபாநாயகரின் உத்தரவு செல்லும்.. அதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ள அதேவேளையில், தகுதி நீக்க நடவடிக்கை குறித்தும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கட்சியின் கொறடா உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களான எஸ். ஜெயக்குமார், கே. மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, டாக்டர் இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 பேருக்கு எதிராகக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை கோரும் மனுக்கள் சபாநாயகரிடம் நிலுவையில் இருந்தபோது, அதனைப் பற்றி விசாரிக்காமல் அவசர அவசரமாக அவர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டது முற்றிலும் சட்டவிரோதம் என்றும், இது கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அதிமுக தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.தீர்ப்பில், 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது உறுப்பினர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்கக் கூடாது என்ற தடை விதிகளில் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே வேளையில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும், இதற்கான இறுதி முடிவை அடுத்த 2 மாதங்களுக்குள் சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பானது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கால அரசியல் திருப்பங்களுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
