#BREAKING: கனடா பொருட்களுக்கு 50% வரி விதிப்பு - ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

 
ட்ரம்ப்

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளையறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 1930-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டப் பிரிவு 338-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகக் கனடா அரசு 'பாகுபாடான வர்த்தகக் கொள்கைகளை' பின்பற்றி வருகிறது என்றும், அமெரிக்க வர்த்தகத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள், மதுபானங்கள் (வொயின், பீர்) மற்றும் பால் பொருட்களுக்குக் (பாலாடைக்கட்டி உள்ளிட்டவை) கனடா சந்தையில் முறையற்ற மற்றும் சமமற்ற தடைகளை விதித்துள்ளதாக டிரம்ப் சாடியுள்ளார்.

டிரம்ப்  கனடா

அமெரிக்கா முன்னதாக விதித்த வரிகளுக்குப் பதிலடியாகக் கனடா பழிவாங்கும் வரிகளைச் சுமத்தியதும் இந்த 50% கூடுதல் வரி விதிப்பிற்கு முக்கியக் காரணமாகும். இந்த 50% கூடுதல் வரியிலிருந்து சில முக்கிய எரிசக்தி மற்றும் அடிப்படைப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது:

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிசக்தி பொருட்கள், பொட்டாஷ், மீன் வளம் மற்றும் முக்கியத் தாதுக்களுக்கு இந்த வரி விதிக்கப்படாது. அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் மூலம் வரி விலக்கு பெற்றிருந்த பல நுகர்பொருட்கள், மரக் கட்டைகள், ஆடைகள், ரசாயனங்கள், விளையாட்டுக் கருவிகள் மற்றும் ஆல்கஹால் பொருட்கள் இந்த 50% வரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கனடா உயர்கல்வி

சுமார் $20 பில்லியன் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்களைப் பாதிக்கும் இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக இருந்து வந்த வர்த்தக இணக்கமான சூழலை கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்தத் திடீர் நடவடிக்கை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலுமே நுகர்வோர் பொருட்களின் விலையை உயர்த்தி, பணவீக்கத்தை அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச வர்த்தகச் சந்தையில் புதிய பொருளாதாரக் குழப்பத்தையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.