#BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகள் காரணமாகச் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் சௌகார் ஜானகி.
திரையுலகிற்கு அவர் ஆற்றிய உயரிய சேவையைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்குக் கடந்த 2022-ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
