BREAKING : பெரம்பூரில் விஜய் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுப்பு!

 
தவெக விஜய் தவெக விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வரும் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இதற்காகப் பெரம்பூர் பேசின் பாலத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கி, வியாசர்பாடி முல்லை நகரில் உரையாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் பிரச்சாரத்திற்கும் ரோடு ஷோ நடத்தக் காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

தவெக விஜய்

பிரச்சாரக் கூட்டத்தில் சுமார் 3,000 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் எனத் தவெக தரப்பில் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வர வாய்ப்புள்ளதால் போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாகக் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சென்னை காவல் துறை மிக உறுதியாக உள்ளது. கூடுதல் காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அடங்கிய குழுவினர் இன்று இது குறித்து அவசர ஆலோசனை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அதிகப்படியான கூட்டத்தைத் தாங்குமா என்பது குறித்தும், போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மேடை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

தவெக விஜய்

தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய அனுமதி வழங்கும் பட்சத்தில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் பாதுகாப்பு வழங்குவது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை போலீசார் இறுதி செய்வார்கள்.