#BREAKING: “மசூதிக்குள் நுழைய பெண்களுக்குத் தடை இல்லை!” - உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அதிரடி விளக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மற்றும் இதர மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, மசூதிகளில் பெண்கள் நுழைவது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள விளக்கங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு நிலவும் பாகுபாடுகள் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சம்ஷாத் ஆஜராகி முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

மசூதிகளில் பெண்கள் நுழைவது குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாரியம், “இஸ்லாமிய மார்க்கத்தின் எந்தவொரு பிரிவிலும் பெண்கள் மசூதிக்குள் நுழையவோ அல்லது அங்குத் தொழுகை நடத்தவோ தடை விதிக்கப்படவில்லை. ஆண்களுக்கு மசூதிக்குச் சென்று கூட்டாகத் (ஜமாஅத்) தொழுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்களுக்கு அது கட்டாயமல்ல; அவர்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்தது மற்றும் அதற்குரிய முழுப் பலனும் கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மசூதிக்கு வரும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும். மசூதிகளில் கருவறை என்று எதுவும் கிடையாது என்பதால், அவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து தொழலாம்.
இந்த வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, ஒரு சுவாரஸ்யமான மற்றும் எதார்த்தமான கருத்தைப் பதிவு செய்தார். “ஒரு வீட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் மசூதிக்குச் சென்றால், குழந்தைகளை வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள்? அதனால்தான் பெண்களுக்கு வீட்டில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கலாம்.”

இதனை வழக்கறிஞர் சம்ஷாத் ஏற்றுக்கொண்டதோடு, நபிகள் நாயகம் காலத்திலேயே “பெண்கள் மசூதிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்ற அறிவுறுத்தல் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய நடைமுறைகளில் ‘அத்தியாவசிய மத நடைமுறை’ என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகச் சம்ஷாத் வாதிட்டார். இஸ்லாம் என்பது மிகவும் ஆழமாக எழுதப்பட்ட ஒரு மார்க்கம் என்றும், அதன் நுணுக்கங்களைத் தவறான மொழிபெயர்ப்புகள் மூலம் அணுகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
