திணறுது மூச்சு... டெல்லியில் அதிகரிக்கும் மாசு... அனைத்து கட்டுமான பணிகளுக்கும் 42 நாட்களுக்கு முழு தடை!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை 42 நாட்களுக்கு அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலக் காற்று மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பெரிய கட்டுமானத் தளங்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும் விதிமீறல்களைத் தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் டஸ்ட் போர்ட்டல் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
