பகீர்... செங்கலால் மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகள்!
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் முகிலினா கிராமத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் என்பவரின் மனைவி பிரஜோத் கவுர் (27) என்பவருக்கும், அவரது மாமியார் நிர்மலா கவுருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 14-ம் தேதி ஹர்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் வீட்டில் மாமியாரும் மருமகளும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.

கணவன் இல்லாத அந்த நேரத்தில் மாமியாருக்கும், மருமகள் பிரஜோத் கவுருக்கும் இடையே இரவு நேரத்தில் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக ஆத்திரமடைந்த மருமகள், வீட்டில் கிடந்த கனமான செங்கலை எடுத்துத் தனது மாமியார் நிர்மலா கவுரின் தலையில் மிகக் கொடூரமான முறையில் அடுத்தடுத்து பலமாகத் தாக்கியுள்ளார். இதில் முதியவர் நிர்மலா கவுர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஹர்தீப் சிங், அங்கு தனது தாயார் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அலறியடித்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் பிரஜோத் கவுரை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். குடும்பத் தகராறில் மருமகளே மாமியாரைச் செங்கலால் அடித்துக் கொன்ற இந்த துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
