BRICS Summit 2026: மோடி, புதின், ஜின்பிங் ஒரே மேடையில்... இன்று நடக்கப் போவது என்ன?

 
பிரிக்ஸ்

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 12) கோலாகலமாகத் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

  • இந்தியாவின் தலைமை: 2026 ஜனவரி 1-ஆம் தேதி இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றதை அடுத்து, இந்த மாநாடு டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. உலக நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பதால், சர்வதேச அளவில் கவனம் டெல்லி மீது திரும்பியுள்ளது.

  • தலைவர்களின் வருகை: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மேலும், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

  •  விவாதங்கள்: ஈரான் தொடர்பான போர் சூழல், அதன் காரணமாக ஏற்படும் உலகளாவிய பொருளாதார தாக்கம், வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • சர்வதேச எதிர்பார்ப்பு: மோடி, புதின், ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒரே மேடையில் கூடுவதால், பிரிக்ஸ் மாநாடு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக அரசியலிலும் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.