திருமணமான புதுமணப்பெண் மாயமான 8 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் திருமணமான புதுமணப்பெண் மாயமான நிலையில், 8 நாட்களுக்குப் பின்னர் ஹேமாவதி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகருக்கும், பிரியங்காவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி இரவு கணவன், மனைவி இருவரும் அப்பகுதியிலுள்ள ஹேமாவதி கால்வாய்ப்பகுதிக்குச் சென்ற போது, பிரியங்கா திடீரெனக் கால்வாயில் குதித்து மாயமானதாகக் கூறப்பட்டது.

கால்வாயில் பலத்த நீர்வரத்து காரணமாகத் தீயணைப்புத் துறையினர் உடனே தேடிக் கண்டறிய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே, தனது மகளைக் கணவர் ராஜசேகர்தான் திட்டமிட்டுத் கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டதாகப் பிரியங்காவின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
பிரியங்காவின் கணவர் தரப்போ, பிரியங்காவுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்த உண்மை மறைக்கப்பட்டதாகவும் கூறித் தங்களது தரப்பு நியாயத்தை முன்வைத்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதலும் வாக்குவாதமும் நிலவியது.

இந்நிலையில், கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, சரவணபெலகோலா அருகே கால்வாயில் பிரியங்காவின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
