கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பரிதாப பலி... பகீர் வீடியோ!

 
paalam paalam

 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் மோராகந்தர் கிராமம் முதல் குரானா பகுதியின் நைதி கிராமம் வரை பெத்வா ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதி முழுவதும் திடீரென  சூறாவளிக் காற்று வீசியதோடு, இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது.

பயங்கரமான புயல் காற்று வீசியதால், அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பாலத்தின் அடியிலும், புதிதாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஸ்லாப் (Slab) பகுதிகளின் அருகிலும் ஒதுங்கி உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் எதிர்பாராத விதமாகப் பாலத்தின் ஒரு பெரிய கான்கிரீட் பகுதி நிலைகுலைந்து, அடியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், லால்புரா காவல் துறையினர் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தால் இடிபாடுகளில் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆறு தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், படுகாயமடைந்த மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ஹமீர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது பாலத்தின் தூண் ஒன்றின் மேல் பகுதியில் சிக்கித் தவித்த மேலும் மூன்று தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் சாதுரியமாக மீட்டனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து   நடைபெற்று வருகின்றன.