பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு!
பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், தனது தயாரிப்பு விளம்பரங்களில் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நுகர்வோரின் உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் நிறுவனங்களின் இது போன்ற தவறான நடைமுறைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆணையர் நிதி கரே தலைமையிலான அமர்வு அண்மையில் பிறப்பித்த இந்த உத்தரவில், பிரிட்டானியா நிறுவனத்தின் பிரெட் தயாரிப்புகளின் பேக்கேஜிங் மற்றும் விளம்பரங்கள் நுகர்வோர் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்நிறுவனம் சந்தைப்படுத்திய பிரெட் முற்றிலும் முழு கோதுமை மாவால் மட்டுமே தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றத்தை விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்தியுள்ளன. "100% முழு கோதுமை பிரெட்", "0% மைதா" மற்றும் ஆரோக்கியமான உணவுக்கு ஏற்றது போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சிசிபிஏ, நிறுவனத்தின் விளம்பர உத்திகளையும் தயாரிப்பு முறைகளையும் தீவிரமாக ஆய்வு செய்தது.

ஆணையத்தின் தீவிர விசாரணையில், பிரிட்டானியா நிறுவனத்தின் அந்தப் பிரெட்டில் வெறும் 62% மட்டுமே முழு கோதுமை மாவு பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமானது. மீதமுள்ள 38% பகுதியில் தண்ணீர், ஈஸ்ட் மற்றும் கோதுமை தவிடு உள்ளிட்ட பிற பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும், இதற்குப் பதிலளித்த பிரிட்டானியா தரப்பு, தங்களது விளம்பரங்களில் இடம்பெற்ற "100%" என்ற வார்த்தை பிரெட்டில் உள்ள கோதுமைப் பகுதியை மட்டுமே குறிப்பதாகவும், அதில் மைதா சிறிதும் கலக்கப்படவில்லை என்றும் வாதிட்டது. மேலும், "முழு கோதுமை பிரெட்" என விற்கப்படும் பொருட்களில் குறைந்தபட்சம் 75% முழு கோதுமை மாவு இருக்க வேண்டும் என்ற உணவு லேபிளிங் விதிமுறைகளையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தது.
பிரிட்டத்தானியா நிறுவனத்தின் இந்த வாதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்தது. "'100%' என்ற வெளிப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மூலப்பொருளின் தனிப்பட்ட தன்மையை மட்டும் குறிக்காது; அது ஒட்டுமொத்தத் தயாரிப்பின் மொத்தக் கலவையைக் குறிப்பதாகும்" என்று ஆணையம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியது. மேலும், பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தப்பட்ட தவறான தகவலை, மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட விளக்க வாசகங்கள் சரி செய்யாது என்றும் CCPA சுட்டிக்காட்டியது.

கூடுதலாக, இந்த பிரெட்டின் மூன்று துண்டுகள் ஒரு ரோட்டிக்குச் சமமான நார்ச்சத்து வழங்குவதாகவும், ஆரோக்கியமான உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் வெளியான விளம்பரங்கள் குறித்தும் ஆணையம் கேள்வி எழுப்பியது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்கனவே "100%" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் திசைதிருப்பும் செயலாகும் என்று எச்சரித்துள்ளதை ஆணையம் நினைவூட்டியது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு பிரிட்டானியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து ஊடகங்களிலும் இந்த விளம்பரங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் இது தொடர்பான இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் CCPA தனது உத்தரவில் கடுமையாக எச்சரித்துள்ளது.
