6,000 அடி உயரத்தில் விமானம் அருகே பறந்த மர்மப் பொருள்... பரபரப்பு வீடியோ!
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் அருகே, அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று மிக வேகமாகப் பறந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானி கண்ட மர்மப் பொருள்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் புறப்பட்டது. விமானம் சுமார் 6,000 அடி உயரத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது, அதன் வலது இறக்கைக்கு அருகே வெள்ளி நிறத்தில் பளபளக்கும் உலோகப் பொருள் ஒன்று எதிர்த்திசையில் மிக வேகமாகக் கடந்து சென்றதாக விமானி தெரிவித்துள்ளார்.
அந்தப் பொருள் விமானத்தின் உயரத்திலிருந்து சுமார் 50 அடி மேலே சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் அளவு நான்கு டோஸ்டர்கள் ஒன்றாக வைத்திருப்பதைப் போன்றிருந்ததாக விமானி விவரித்துள்ளார். அது டிரோனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், உறுதிப்படுத்தப்படவில்லை.
மிக உயர்ந்த ஆபத்துப் பிரிவில் வகைப்படுத்தல்
இந்தச் சம்பவம் குறித்து விமானப் பாதுகாப்பு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. மர்மப் பொருளின் தன்மையைத் தீர்மானிக்கப் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், மோதல் அபாயம் மிகுந்த சம்பவமாக இது வகைப்படுத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, விமானம் எந்தப் பாதிப்புமின்றி தனது பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சென்றடைந்தது. விமானங்களுக்கு அருகே அடையாளம் தெரியாத பொருட்கள் பறப்பது பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
