நிஜக் குதிரை ஆசை நிறைவேறல... 4,550 பொம்மைகளைச் சேகரித்து உலக சாதனை படைத்த பெண்... வைரல் வீடியோ !
சிறுவயதில் நிஜக் குதிரை வளர்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால், பொம்மைக் குதிரைகளைச் சேகரிக்கத் தொடங்கிய பிரிட்டன் பெண் ஒருவர், தற்போது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் சஃபோக் மாகாணம் லோவெஸ்டாஃப்ட் பகுதியைச் சேர்ந்தவர் மிராண்டா வோர்பி. சிறுமியாக இருந்தபோது தனக்கு ஒரு குதிரை வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதையடுத்து, கடையில் பார்த்த ‘மை லிட்டில் போனி’ என்ற வண்ணமயமான பொம்மைக் குதிரைகள் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
தொடக்கத்தில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த ஆர்வம், பின்னர் தீவிரமான சேகரிப்பாக மாறியது. பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் கிடைக்கும் பொம்மைகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களைத் தேடிச் சேகரித்தார்.
இதன் விளைவாக, அவரிடம் 4,550 ‘மை லிட்டில் போனி’ தொடர்பான பொருட்கள் சேர்ந்தன. உலகிலேயே மிகப்பெரிய ‘மை லிட்டில் போனி’ சேகரிப்பு என்ற பிரிவில் அவருக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தச் சாதனைக்குப் பிறகும் தனது சேகரிப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தப் போவதாக மிராண்டா தெரிவித்துள்ளார்.
