பெங்களூரில் கொடூரம்... கர்ப்பிணி பெண் காவலரை இரும்புக் கம்பியால் தாக்கிய கொடூரம் - புகாரளிக்க சென்ற வாலிபர் வெறித்தனம்!
பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞரால் கர்ப்பிணிப் பெண் காவலர் மீது இரும்பு கம்பியால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று அதிகாலை மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்திற்கு கஜேந்திரா என்ற இளைஞர் செல்போன் காணாமல் போனதாகப் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், காலையில் வந்து புகார் அளிக்குமாறு பெண் காவலர் ஷில்பா அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து வெளியே சென்ற அந்த இளைஞர், சிறிது நேரம் கழித்து மீண்டும் காவல் நிலையத்திற்குள் வந்து இரும்பு கம்பியால் ஷில்பாவின் தலையில் 7 முதல் 8 முறை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த பெண் காவலரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கஜேந்திராவை ரயில்வே போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
