சென்னையில் கொடூரம்... தீப விளக்கில் டீசல் கேன் பட்டு தந்தை - மகள் உயிரிழப்பு!

 
தந்தை மகள் விளக்கு பலி

சென்னை மாதவரம் கணபதி தோட்டம் பகுதியில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் டீசல் கேன் தவறி விழுந்ததில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சிக்கிய 2 வயதுக் குழந்தையைக் காப்பாற்றச் சென்ற தந்தை உள்பட இருவர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாதவரம் கணபதி தோட்டம் பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வீட்டில் விளக்கு ஏற்றி வைத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக டீசல் கேன் ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப விளக்கின் மீது தவறி விழுந்துள்ளது. டீசல் சிதறிய வேகத்தில் வீட்டிற்குள் தீ மளமளவெனப் பரவியதில், வீட்டில் இருந்த 2 வயதுக் குழந்தை தன்ஷிகா தீயில் சிக்கிக் கொண்டார்.

அகல் விளக்கு தீபம்

தீயில் சிக்கிய 2 வயது மகள் தன்ஷிகாவை மீட்பதற்காகத் தந்தை அறிவழகன் தீக்குள் பாய்ந்து போராடியுள்ளார். இதில் தன்ஷிகா மற்றும் அறிவழகன் ஆகிய இருவரும் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ

இந்த துயர சம்பவத்தில் தாய் அஞ்சனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறீத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.