புதிய கார்களுக்கு 2029 முதல் பி.எஸ்-7 விதிகள்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், புதிய கார்கள் மற்றும் எஸ்.யு.வி. ரக வாகனங்களுக்கு பி.எஸ்-7 மாசு கட்டுப்பாட்டு விதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் 2029-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 2031 மற்றும் 2035-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த கட்டங்களாக விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2035 ஏப்ரல் மாதத்துக்குள் முழுமையாக அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் யூரோ-7 மாசு கட்டுப்பாட்டு தரநிலைகளுக்கு இணையாக உருவாக்கப்பட உள்ளன.
காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய கட்டுப்பாடுகள்
பி.எஸ்-7 விதிகளின் மூலம் நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட நச்சு மாசுக்கள் மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. வாகனங்களின் வெளியேற்ற மாசு அளவைக் கண்காணிப்பதற்கான கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட உள்ளன.
அதேநேரத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள பி.எஸ்-6 வாகனங்களுக்கு இந்தப் புதிய விதிகளால் பாதிப்பு ஏற்படாது என்றும், அவற்றின் வழக்கமான ஆயுட்காலம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு முதல் பி.எஸ்-6 மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளன. பி.எஸ்-7 விதிகள் அமலுக்கு வரும்போது புதிய வாகனங்களின் மாசு வெளியேற்றத்தைக் குறைப்பதில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
