செம... சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு... புதிய சாதனை முயற்சி!

 
பிடெக்.,

 

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்முறையாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் பெற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சார்ந்த பொறியியல் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் நவீன தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் பாரம்பரிய அறிவையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளை மின்மயமாக்கவும் இந்திய மொழிகளில் புதிய தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பப் படிப்பிற்கான முதற்கட்டப் பிரிவில் மொத்தம் 66 இடங்கள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஒன்றில் இத்தகைய நவீனப் பொறியியல் படிப்பு வழங்கப்படுவது நாட்டின் கல்வி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் போன்ற பாடங்களைக் கற்றுக்கொள்வதோடு நாட்டின் பாரம்பரிய மொழியியல் மரபுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இத்திட்டம் உயர்கல்வி நிறுவனங்களைப் பல்துறை கல்வி மையங்களாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது   மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இந்த புதிய முயற்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். நாட்டின் பண்டைய அறிவுச் செல்வத்தையும் வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு தொலைநோக்கு நடவடிக்கை இது என்று அவர் புகழ்ந்துரைத்துள்ளார். மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைதளப் பதிவில் இந்தத் திட்டம் இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வளர்க்கும் என்றும் பழங்கால ஆவணங்களைப் பாதுகாக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

 டெல்லி முதலமைச்சர்ரேகா குப்தாவும் இந்தத் திட்டத்தை வரவேற்று, இது தொழில்நுட்பத்தை இந்தியாவின் பாரம்பரிய அறிவு அமைப்புடன் இணைப்பதற்கான ஒரு முக்கியப் படி என்று விவரித்தார். மேலும், இந்தத் திட்டம் நாட்டின் பழங்கால நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.