பட்ஜெட் கூட்டத்தொடர்... உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
தமிழகச் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்குக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதுகுறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவது மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தொகுதி மக்களின் கோரிக்கைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் தேவைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
திமுக கொறடா ஏ.வ.வேலு இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இக்காணொலி அமைப்புக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
